Monday, April 23, 2018

உலகெலாம் சைவ நீதி பரவச் செய்த உன்னதப் புது விழா முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் எழுபத்தோராம் ஆண்டு அகவை விழா



          சேக்கிழார் தான் எழுதிய பெரிய புராணக் காப்பியத்தை ‘‘மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலககெலாம்”  என்று நிறைவு செய்கிறார்.  இந்தத் தொடருக்கு என்ன பொருள்?
உலகம் சைவ நீதியின்படி இயங்குகிறது, இயங்கவேண்டும் என்பது தானே இதன் பொருள். உலகம் சைவநீதிப்படி இயங்க என்ன என்ன செய்யலாம். சைவத்தின் வழியில் தம் வாழ்க்கையை மக்கள் அமைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பெருமை மிகு சைவ வாழ்வினை எவ்வாறு வாழ்வது. திருமுறைகளை ஓதலாம். சித்தாந்தக் கருத்துகளை மனதில் தெளியலாம். திருவாசகம் படிக்கலாம். இதையெல்லாம் விட எளிமையான வழி திருத்தொண்டர்களை இல்லத்திற்கு அழைத்துப் போற்றி அவர்களுக்கு  வேண்டுவன அளித்து சைவ நெறி நிற்கலாம்.  இதுவே பெரியபுராணம் சைவம் நிலைக்கக் காட்டும் எளிய வழி. இந்த வழியைச் சித்தாந்தத் தெளிவு பெற்ற முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் தன் எழுபத்தோராவது பிறந்த நாள் விழாவில் செய்து மகிழ்ந்தார்.
சாக்கோட்டை சைவக் கோட்டையாக மே மாதம்27, 28 ஆம் நாள்கள் காட்சியளித்தது. அவ்விரு நாட்களும் சாக்கோட்டைக்கு வந்தவர்கள் சிவலோகத்தில் இருக்கும் பேறு பெற்றார்கள். வீதியெலாம் சிவக்கொடி. காணும் இடமெலாம் நமசிவாய மந்திரம். கேட்பது திருவாசகமும், அகத்தியர் தேவாரத்திரட்டும். பேசுவது இறைவன் திருநாமம். பூசுவது திருநீறு. சுவாசிப்பது சிவனடியார் திருமூச்சின் மிச்சம். அனைவரும் சிவனடியார்கள்.  வந்த வாகனங்கள் அனைத்தும் சிவவாகனங்கள், சிவ கனங்கள். இப்படியோர்  இனிய காட்சி. என்றைக்கும் காணக் கிடைக்காத அருட் காட்சி. இந்நாள் தொடங்கி எந்நாளும் சைவக் கோட்டையாகிவிட்டது சாக்கோட்டை.
இந்தச் சைவவிழா இருநாள்கள் நடைபெற்றன. முதல்நாள் மாலை மங்கல இசையும், நெய்வேலி  இராசபதி ஓதவாரின் தேவார இன்னிசையும் செவிவழி புகுந்து சிவலோக வாசலைத் திறந்தன. இதனோடு சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கடவுளர்க்கும் அறுபத்துமூவருக்கும்   அபிடேகம் சிறப்பாக நடைபெற்றது.  அறுபத்துமூவர் வீற்றிருந்த இடம்  பூக்களால், அகல் விளக்குகளால்  ஒளிபட மின்னியது. புத்தாடை, பூவாடை பூண்டு அறுபத்து மூவரும் சிலைவடிவில் அடையாளமாக நின்று இவ்விழாவை வாழ்த்தினர்.
அடுத்தநாள் ஞாயிறு சிவஞாயிறு. திருமுறைப்படி கலச வழிபாடு இயற்றப் பெற்றது. எழுபத்தொன்று காணும் இனிய சைவப் பேரறிஞர் பழ. முத்தப்பன், அழகம்மை இணையருக்கு மங்கல நன்னீராட்டு நடைபெற்றது. கோவிலில் காலை வழிபாடு நடைபெற்று அகத்தியர் தேவாரத்திரட்டு கோயிலின் திருவாசல் முன் தேனாய்ப் பரவியது. அது தேவாசிரிய மண்டபமாக மிளிர்ந்தது.
நன்பகல் பதினோரு மணியளவில்  வீரசேகர உமையாம்பிகை கோயிலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்கத் தேவாரம் ஒலிக்க, சிவச்சின்னங்கள் முன்னே வர மங்கல இசை முழங்க சிவனடியார்களை அழைக்க  தன் குடும்பத்துடன் வந்தார் பேராசிரியர் பழ. முத்தப்பன்.
கோயிலின் திருவாசலில்  ஆசனங்களில் சிவனடியார்கள் வீற்றிருந்தனர். கோவிலூர் ஆதீனம் தொடங்கி மனையறத்தின் வேராக அமைந்த பெண்ணடியார்களும் இவ்வரிசையில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் வணங்கி உருத்திராக்க மாலையை அணிவித்து மகிழ்ந்தது வரவேற்ற  வந்த கூட்டம்.  இதன்பின் சிவனடியார்கள் கோயிலைச் சிவபுராணம் சொல்லிச் சுற்றி வந்து,   சாக்கோட்டை யெ.பெரி கட்டத்திற்கு எழுந்தருளினர். அங்கு அவர்களை வரவேற்றுப் பாதம் கழுவி இளையான்குடி மாற நாயனார்  குடும்பத்தார் ஆயினர் முத்தப்பனாரின் குடும்பத்தார்.
இதன்பின்  யெ. பெரி கட்டடத்தின் உள்ளே வந்த சிவனடியார்கள் அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தனர். அவர்களுக்கு முன் அபிடேகப் பொருள்கள் அணிவகுத்திருந்தன. அடியார்களின் திருப்பாதங்களைத் தட்டில் வைத்து பாத பூசை தொடங்கப்பெற்றது. நீரால், பாலால், தயிரால், பன்னீரால் சிவ ஆலயங்களைத் தேடிச் சென்ற பாதங்களுக்கு அபிடேகம் நடந்தது. இதன்பின் சந்தனம் பூசி, குங்குமப் பொட்டிட்டு, மென்மையான ஓசூர் ரோஜாப் பூக்களால் அடியார்தம் பாதங்கள் அர்ச்சிக்கப்பெற்றன. திருத்தொண்டத் தொகை அடியார்கள் பெயரிட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை நடைபெற்றது.   இதனைத் தொடர்ந்து  கனகாபிஷேகம் சிவனடியார்களுக்கு நடைபெற்றது. உச்சி முதல் பாதம் வரை காசுகளால் அர்ச்சனை செய்து பழ. முத்தப்பனாரின் குடும்பத்தார் சிவக்கடமை ஆற்றினர். பாத பூசை கொண்ட சிவனடியார்கள் திருநீறு தர அவர்கள் மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பெற்றனர். அங்கு மகேஸ்வர பூசை நடைபெற்றது. அன்னப்பாலிப்பு மூவகைப் பழங்கள், காய்கறிகள், அன்னம் ஆகியவற்றுடன்  நடைபெற்றது.  எழுபத்தொன்று காணும் அன்பர் பணிந்து வேண்ட சிவனடியார்கள் சிவப்பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர்.
இவ்வளவையும் ஆடாமல் அசையாமல் அகலாமல் நின்று பார்த்தோர், சன்னலில் பார்த்தோர், தொலைக்காட்சியில் பார்த்தோர் ஆயிரம் ஆயிரம் பேர். பேருந்து பேருந்தாக பெருந்திரள் கூட்டம் வந்து சேர்ந்தது.  ஊரில் உள்ள அக்கம் பக்கத்தார்  அணைந்தே வந்து சேர்ந்தனர். இந்தக் கூட்டம் ஞானசம்பந்தர் பின்னும், நாவுக்கரசர் பின்னும் சென்ற கூட்டத்தை நினைவு படுத்தியது. நம் காலத்தில் சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் இல்லையே என்ற ஏக்கத்தை நினைவு படுத்தியது.
திருத்தொண்டர் பெருமை கொண்ட இந்த விழாவில் திருத் தொண்டர் திருவந்தாதி நூல் பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களின் உரையுடன் வெளியிடப்பெற்றது. பேராசிரியர் தேவநாவே நூலையும் வெளியிட்டார். பழ. முத்தப்பரின் வாழ்வுயர்வுகளையும் அளந்துரைத்தார். மற்றொரும், மாணவரும், இனியோரும் வாழத்துரைத்தனர். நிலைத்த புகழுடைப் புதுவிழாவாக, சைவப் பெருந்திருவிழாவாக இவ்விழா நடந்தது. இது ஒரு முன்மாதிரி விழா. இனிமேல்  நடக்கும் எழுபதெலாம் இப்படி நடந்தால்  மேன்மை கொள் சைவநீதி விளங்கும் உலகமெலாம் என்பதை உணர்த்திய இனிய விழா.