Tuesday, August 07, 2018

கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்


கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். 
கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்

Sunday, May 20, 2018

அறிவை விடச் சிறந்தது அறம்


siragu friends2
மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது.  இந்தப் பகுத்தறிவினைக் கொண்டு மனிதன்  ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.
ஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான் மனித உலகம்  பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும் கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.
அறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும், விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு பாழ்.
இன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”, ”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.
அறிவின் வழி அறம் நிற்பதை விட அறத்தின் வழியில் அறிவு செயல்பட வேண்டும். இதனையே வள்ளுவர் விரும்புகிறார். அதிகாரிகள், மேலாளர்கள், மேலாண் பதவியில் இருப்போர்க்கு இன்னா செய்யாமை இனிய அதிகாரம். பழிக்குப் பழி வாங்கும் எண்ணம்  உடையவர்கள் இந்த அதிகாரத்தைப் படித்துவிட்டால் பழி இன்றி இனியவழி சேருவார்கள்.
ஒருவர் குற்றம் அற்றவர் என்று சொல்லப்பட வேண்டுமானால் பிறர்க்கு இன்னாதனவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். இக்கருத்து சரியே. ஆனால் இன்னாதவை எவை என்று எப்படி அறிவது.
தனக்கு எதெல்லாம் நடக்கக் கூடாது என்ற நினைக்கிறோமோ அதனை எல்லாம் மற்றவர்களுக்கு நடந்துவிடக் கூடாது அல்லது நடத்திக் காட்டிவிடக் கூடாது என்பதை காட்டும் அறமே இன்னா செய்யாமை என்ற அறமாகும்.  இதனைத் தெளிவுபட
            ‘‘இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை
            வேண்டும் பிறன்கண் செயல்” (316)
என்னும் குறளில் வள்ளுவர் விளக்குகிறார்.
இன்னாதன எனத் தான் உணர்ந்தனவற்றை மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறம் என்று வரையறுக்கிறார் வள்ளுவர்.
ஒருவன் மற்றவர்க்கு இன்னாதன செய்கிறான் என்றால் அது திட்டமிட்டுச் செய்யப்படுகிற ஒன்று. முதலில் இன்னா செய்யவேண்டும் என்ற கருத்து அவன் மனதில் இடம் பெறுகிறது. அதனை அவன் தக்க முறையில் திட்டமிட்டுச் செயலாற்றிட வேண்டும். அதன்வழி மற்றவரைத் துன்பப்படுத்திட வேண்டம். அதன்பின் அவன் பிறர் துன்பம் கண்டு மகிழவேண்டும். இவ்வாறு கருத்து, செயல் திட்டம் போன்றனவற்றை உருவாக்கி ஒருவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறார்.  இவ்வாறு திட்டம் போட்டவரின் செயலால் துன்பம் பெற்றவர்  அத்தீங்கை ஏற்படுத்தியவருக்கும் துன்பம் தராமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறத்தின் உயர்வாகின்றது. தன்  துன்பத்தை மற்றவரிடம் செலுத்திவிடாமல் காப்பவரே இன்னா செய்யாமை அறத்தின் வேராக விளங்க முடியும்.
அவர் திட்டமிட்டு எனக்குத் தீங்கு செய்தார் என்று எண்ணும் எண்ணமே ஒருவனை இன்னாதனவற்றைச் செய்துவிடும். ஆகவே துன்பத்தையும், துன்பம் தந்தவரையும் மனதால்  எந்த காலத்திலும் எந்த இடத்திலும் நினைக்காமல் இருந்தால் மட்டுமே இன்னா செய்யாமை என்ற அறத்தைக் காக்க முடியும்.
‘‘எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை” (317)
அப்படியானால் துன்பம் வந்த நிலையை மறந்து  வாழ்பவரின் வாழ்வே இனிமை உடையது என்பது வள்ளுவர் காட்டும் நல்வழியாகின்றது.
தன்னை வருத்தியவர்களுக்கு இன்னாதனவற்றை ஒருவன் செய்தான் என்றால் அதனால் அவன் பல கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். நமக்கு இன்னா செய்தவர் நாண நல்லனவற்றைச் செய்தலே இவ்வறத்தின் பாற்படும்.
இவ்வாறு இன்னா செய்யாமல் இருக்கச் சொல்லும் வள்ளுவர் இன்னாதவற்றைத் திட்டமிட்டுச் செய்து துன்பம் தந்து மகிழும் உள்ளமுடையோரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையா என்றால்,  அதற்கும் ஒரு குறள் பதில் சொல்கிறது.
           ‘‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
            பிற்பகல் தாமே வரும்” (319)
பிறருக்குத் திட்டம் போட்டுத் தீமை செய்கிறவன் செய்து கொண்டே இருக்கிறான் என்றால் அவனுக்குத் திட்டமிடாமலே தானாகவே இன்னாதன  வந்துசேரும். முற்பகலில் திட்டம் போட்டால் பிற்பகலில் திட்டம் போடாமலே தீமை ஏற்படுத்தியவனுக்குத் தீமை வந்துசேரும் என்ற வள்ளுவரின் கோட்பாடு தீமை செய்பவர்களைக் கண்டால் வள்ளுவருக்குப் பிடிக்காது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
மனிதர்களுக்கு இன்னாதது நோய்கள் தான். நோய் என்பது உடலுக்கு வேறான ஒன்றில் இருந்து வருவது. எனவே திட்டமிட்டுச் செய்யப்படும் துன்பமும் நோய் போன்றதே என்கிறார் வள்ளுவர். பிறருக்கு நோய் தருபவருக்கும் அவர் அறியாமலே அந்நோய் வந்து சேர்ந்துவிடுகிறது. பிறரை வருத்தும் நோய் செய்யாதவர்கள் தானும் நோய்வாய்ப்படாமல் காக்கப்படுவர். எனவே இனிமையைச் செய்க. இன்னாதவற்றைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர். இவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறிக்கத்தக்க குறள்.
            ‘‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
            தன்நோய்போல் போற்றாக் கடை” (315)
என்ற குறளில் அறிவை விட சிறந்தது இன்னா செய்யாமை அறம் என்கிறார் வள்ளுவர். அறிவு ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். ஆனால் இன்னா செய்யாமை என்கிற அறம் ஆக்கம் மட்டுமே தரும். அதனைப் பின்பற்றுபவர்க்கு அழிவே தராது.
அறிவு இருந்தும்  என்ன பயம்? பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கருதி  அதனை நீக்கப் பாடுபடாத அறிவினால் என்ன பயன்? அறிவாளிகளால் பயனில்லை. இந்த உலகிற்கு அறச் சிந்தனையாளர்களால் மட்டுமே பயன்! அறச்சிந்தனையுடன் கூடிய அறிவே பயன்மிக்கது என்ற அறநெறிமேம்பாட்டை இந்தக் குறளின் வழி காட்டுகிறார் வள்ளுவர். இதனை அறிந்து செயல்படும் நிலையில் உலகம் இனியதாய்  அமையும்.

Monday, April 23, 2018

உலகெலாம் சைவ நீதி பரவச் செய்த உன்னதப் புது விழா முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் எழுபத்தோராம் ஆண்டு அகவை விழா



          சேக்கிழார் தான் எழுதிய பெரிய புராணக் காப்பியத்தை ‘‘மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலககெலாம்”  என்று நிறைவு செய்கிறார்.  இந்தத் தொடருக்கு என்ன பொருள்?
உலகம் சைவ நீதியின்படி இயங்குகிறது, இயங்கவேண்டும் என்பது தானே இதன் பொருள். உலகம் சைவநீதிப்படி இயங்க என்ன என்ன செய்யலாம். சைவத்தின் வழியில் தம் வாழ்க்கையை மக்கள் அமைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பெருமை மிகு சைவ வாழ்வினை எவ்வாறு வாழ்வது. திருமுறைகளை ஓதலாம். சித்தாந்தக் கருத்துகளை மனதில் தெளியலாம். திருவாசகம் படிக்கலாம். இதையெல்லாம் விட எளிமையான வழி திருத்தொண்டர்களை இல்லத்திற்கு அழைத்துப் போற்றி அவர்களுக்கு  வேண்டுவன அளித்து சைவ நெறி நிற்கலாம்.  இதுவே பெரியபுராணம் சைவம் நிலைக்கக் காட்டும் எளிய வழி. இந்த வழியைச் சித்தாந்தத் தெளிவு பெற்ற முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் தன் எழுபத்தோராவது பிறந்த நாள் விழாவில் செய்து மகிழ்ந்தார்.
சாக்கோட்டை சைவக் கோட்டையாக மே மாதம்27, 28 ஆம் நாள்கள் காட்சியளித்தது. அவ்விரு நாட்களும் சாக்கோட்டைக்கு வந்தவர்கள் சிவலோகத்தில் இருக்கும் பேறு பெற்றார்கள். வீதியெலாம் சிவக்கொடி. காணும் இடமெலாம் நமசிவாய மந்திரம். கேட்பது திருவாசகமும், அகத்தியர் தேவாரத்திரட்டும். பேசுவது இறைவன் திருநாமம். பூசுவது திருநீறு. சுவாசிப்பது சிவனடியார் திருமூச்சின் மிச்சம். அனைவரும் சிவனடியார்கள்.  வந்த வாகனங்கள் அனைத்தும் சிவவாகனங்கள், சிவ கனங்கள். இப்படியோர்  இனிய காட்சி. என்றைக்கும் காணக் கிடைக்காத அருட் காட்சி. இந்நாள் தொடங்கி எந்நாளும் சைவக் கோட்டையாகிவிட்டது சாக்கோட்டை.
இந்தச் சைவவிழா இருநாள்கள் நடைபெற்றன. முதல்நாள் மாலை மங்கல இசையும், நெய்வேலி  இராசபதி ஓதவாரின் தேவார இன்னிசையும் செவிவழி புகுந்து சிவலோக வாசலைத் திறந்தன. இதனோடு சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கடவுளர்க்கும் அறுபத்துமூவருக்கும்   அபிடேகம் சிறப்பாக நடைபெற்றது.  அறுபத்துமூவர் வீற்றிருந்த இடம்  பூக்களால், அகல் விளக்குகளால்  ஒளிபட மின்னியது. புத்தாடை, பூவாடை பூண்டு அறுபத்து மூவரும் சிலைவடிவில் அடையாளமாக நின்று இவ்விழாவை வாழ்த்தினர்.
அடுத்தநாள் ஞாயிறு சிவஞாயிறு. திருமுறைப்படி கலச வழிபாடு இயற்றப் பெற்றது. எழுபத்தொன்று காணும் இனிய சைவப் பேரறிஞர் பழ. முத்தப்பன், அழகம்மை இணையருக்கு மங்கல நன்னீராட்டு நடைபெற்றது. கோவிலில் காலை வழிபாடு நடைபெற்று அகத்தியர் தேவாரத்திரட்டு கோயிலின் திருவாசல் முன் தேனாய்ப் பரவியது. அது தேவாசிரிய மண்டபமாக மிளிர்ந்தது.
நன்பகல் பதினோரு மணியளவில்  வீரசேகர உமையாம்பிகை கோயிலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்கத் தேவாரம் ஒலிக்க, சிவச்சின்னங்கள் முன்னே வர மங்கல இசை முழங்க சிவனடியார்களை அழைக்க  தன் குடும்பத்துடன் வந்தார் பேராசிரியர் பழ. முத்தப்பன்.
கோயிலின் திருவாசலில்  ஆசனங்களில் சிவனடியார்கள் வீற்றிருந்தனர். கோவிலூர் ஆதீனம் தொடங்கி மனையறத்தின் வேராக அமைந்த பெண்ணடியார்களும் இவ்வரிசையில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் வணங்கி உருத்திராக்க மாலையை அணிவித்து மகிழ்ந்தது வரவேற்ற  வந்த கூட்டம்.  இதன்பின் சிவனடியார்கள் கோயிலைச் சிவபுராணம் சொல்லிச் சுற்றி வந்து,   சாக்கோட்டை யெ.பெரி கட்டத்திற்கு எழுந்தருளினர். அங்கு அவர்களை வரவேற்றுப் பாதம் கழுவி இளையான்குடி மாற நாயனார்  குடும்பத்தார் ஆயினர் முத்தப்பனாரின் குடும்பத்தார்.
இதன்பின்  யெ. பெரி கட்டடத்தின் உள்ளே வந்த சிவனடியார்கள் அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தனர். அவர்களுக்கு முன் அபிடேகப் பொருள்கள் அணிவகுத்திருந்தன. அடியார்களின் திருப்பாதங்களைத் தட்டில் வைத்து பாத பூசை தொடங்கப்பெற்றது. நீரால், பாலால், தயிரால், பன்னீரால் சிவ ஆலயங்களைத் தேடிச் சென்ற பாதங்களுக்கு அபிடேகம் நடந்தது. இதன்பின் சந்தனம் பூசி, குங்குமப் பொட்டிட்டு, மென்மையான ஓசூர் ரோஜாப் பூக்களால் அடியார்தம் பாதங்கள் அர்ச்சிக்கப்பெற்றன. திருத்தொண்டத் தொகை அடியார்கள் பெயரிட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை நடைபெற்றது.   இதனைத் தொடர்ந்து  கனகாபிஷேகம் சிவனடியார்களுக்கு நடைபெற்றது. உச்சி முதல் பாதம் வரை காசுகளால் அர்ச்சனை செய்து பழ. முத்தப்பனாரின் குடும்பத்தார் சிவக்கடமை ஆற்றினர். பாத பூசை கொண்ட சிவனடியார்கள் திருநீறு தர அவர்கள் மேல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பெற்றனர். அங்கு மகேஸ்வர பூசை நடைபெற்றது. அன்னப்பாலிப்பு மூவகைப் பழங்கள், காய்கறிகள், அன்னம் ஆகியவற்றுடன்  நடைபெற்றது.  எழுபத்தொன்று காணும் அன்பர் பணிந்து வேண்ட சிவனடியார்கள் சிவப்பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர்.
இவ்வளவையும் ஆடாமல் அசையாமல் அகலாமல் நின்று பார்த்தோர், சன்னலில் பார்த்தோர், தொலைக்காட்சியில் பார்த்தோர் ஆயிரம் ஆயிரம் பேர். பேருந்து பேருந்தாக பெருந்திரள் கூட்டம் வந்து சேர்ந்தது.  ஊரில் உள்ள அக்கம் பக்கத்தார்  அணைந்தே வந்து சேர்ந்தனர். இந்தக் கூட்டம் ஞானசம்பந்தர் பின்னும், நாவுக்கரசர் பின்னும் சென்ற கூட்டத்தை நினைவு படுத்தியது. நம் காலத்தில் சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் இல்லையே என்ற ஏக்கத்தை நினைவு படுத்தியது.
திருத்தொண்டர் பெருமை கொண்ட இந்த விழாவில் திருத் தொண்டர் திருவந்தாதி நூல் பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களின் உரையுடன் வெளியிடப்பெற்றது. பேராசிரியர் தேவநாவே நூலையும் வெளியிட்டார். பழ. முத்தப்பரின் வாழ்வுயர்வுகளையும் அளந்துரைத்தார். மற்றொரும், மாணவரும், இனியோரும் வாழத்துரைத்தனர். நிலைத்த புகழுடைப் புதுவிழாவாக, சைவப் பெருந்திருவிழாவாக இவ்விழா நடந்தது. இது ஒரு முன்மாதிரி விழா. இனிமேல்  நடக்கும் எழுபதெலாம் இப்படி நடந்தால்  மேன்மை கொள் சைவநீதி விளங்கும் உலகமெலாம் என்பதை உணர்த்திய இனிய விழா.

Tuesday, June 20, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2017 சூன் மாதக்கூட்டம் பட்டிமன்றமாக

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2017 சூன் மாதக்கூட்டம் பட்டிமன்றமாக நூற்றாண்டு கணட பராம்பரிய இல்லமான மெ.செ. இல்லத்தில் நடைபெற்றது. சு.ராம தெருவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இல்லத்தின் பின்கட்டில் உள்ள கொட்டகையில் நல்ல விளக்கொளியில் கூட்டம் நடந்தது.
பட்டிமன்றத்துக்கு பேரா மு.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். இன்றையச் சூழலில் இளைஞர்கள் முனமாதிரியாகக் கொள்ளவேண்டியவர் பரதனே, தாரையே, சடாயுவே என்பது தலைப்பு. கம்பன் கழகத்தின் வலுவான விழுதுகளான பேரா மு.பழநியப்பன், பேரா சொ.சேதுபதி, பேரா மா.சிதம்பரம் அணித்தலைமையேற்றனர். இளம் பேச்சாளர்கள் செல்வி தீன்சா நூப், செல்வி அகிலா, திரு சரவணச்செல்வன் துணை நின்றனர். பட்டிமன்றத்தைச் செவிமடுத்தவர் கொடுத்துவைத்தவர்!
தலைவர் தன் பேருரையில் 1.தூயவனான சடாயுவின் குண நலன்கள் 2.பெண்மைக்குப் பங்கம் விளையும் நேரத்தில் எதிர்த்து உயிரையும் கொடுத்துப் போராட முன்வரல் 3.அடிபட்டுக்கிடந்தபோதும் இராமலக்குவர் வரும்வரை உயிரைத்தக்கவைத்து அவருக்கு நல்வழிகாட்டல் முதலியவற்றைக்கொண்டு சடாயுவே இன்றைக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழக்கூடியவர் என்று தீர்ப்பளித்தார். முன்னதாக அழகப்பர் 108வது பிறந்தநாளையொட்டிக் கவிதாயினி வள்ளிமுத்தையா புகழஞ்சலி கவிதை வாசித்தளித்தார்.
தங்கள் பராம்பரிய இல்லத்தில் பொதுவீட்டார் ஒத்துழைப்புடன் கம்பன் விழாக்கூட்டத்தைப் பெருமுயற்சியுடன் விடாது நடத்துகிற கம்பன் அடிசூடி திரு பழ.பழநியப்பனைப் போற்றி வணங்குகிறேன்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Thursday, June 01, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜுன் மாதக் கூட்ட அழைப்பு

கம்பன் கழகம்.
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் ஜுன் மாதத்திருவிழா 3.6.2017 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப் பக்கம் செல்லும் சு. ராம. தெருவில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட செட்டிநாட்டுப் பாரம்பரிய மெ.செ. இல்லத்தில் நடைபெறும்.
இறைவணக்கம்
வரவேற்புரை - கம்பன் அடிசூடி
கம்பன் அடிப்பொடி 108 ஆம் பிறந்த நாள் புகழ் அஞ்சலி - திருமதி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள்
பட்டி மண்டபம்
நடுவர் - திரு மு. இராமச் சந்திரன் (தென்காசி) (சிவகாசி)
தலைப்பு
இன்றைய இளைய சமுதாயத்தினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியவர்
பரதனே
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைஅறிவியல்கல்லூரி, திருவாடானை
மாணவி அ.தீன்ஷா நூப்
உமையாள் இராமநாதன் கல்லூரி, காரைக்குடி
சடாயுவே
முனைவர் மா. சிதம்பரம்
அழகப்பா கலைக்கல்லூரி, காரைக்குடி
திரு. த. சரவணசெல்வன்
கோவில்பட்டி
தாரையே
முனைவர் சோ. சேதுபதி
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால்
செல்வி ந. அகிலா
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
8.30 மணி சிற்றுண்டி
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அரு.வே. மாணிக்கவேலு, சரசுவதி ஆச்சி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
காரைக்கு மெ.செ. அ. மெ. பழ மீனாட்சி ஆச்சி
110 ஆம் பிறந்த நாளுக்காக அவர் தம் குடும்பத்தினர்