Wednesday, November 23, 2016

பொன்விளையும் நகரம் புதுவயல்





   ஊருக்கு நடுவே ஊருணி. ஊருணிக் கரையில் கைலாசநாத விநாயகர் கோவில். கைலாச விநாயகர் கோவிலைச் சுற்றாமல் யாரும் ஊருக்குள் வரவும் முடியாது. ஊரை விட்டு வெளியில் செல்லவும் முடியாது.  முழு முதற்கடவுளான கைலாச நாத விநாயகரை முதலாக வைத்து வழிபடும் ஊராகப் புதுவயல் விளங்குகின்றது. இந்த ஊர் பதினாறு வட்டகையைச் சார்ந்த ஊராகும். இவ்வூரின் சிறப்பினை
செய்யோடு காற்று விளையாடிவரும் நகரம்,
திருமாது மனைகள்தொறும் திகழ்கின்றன நகரம்,
பொய்யாது மழை பொழியப் பொன்விளையும் நகரம் 
என்று பாடினார் கவியரசு கண்ணதாசன்.
கவியரசு சொன்ன சொல் மாறாமல் அப்படியே புகழ் பூத்து நிற்கிறது புதுவயல் நகரம்.  புதுவயல் வயல்களில் விளையும் நெற்பயிர்களில் காற்று புகுந்துவிளையாடும் நகரமாக, அரசி ஆலைகளில் பெருக்கத்தால் அனைத்து வீடுகளிலும் செல்வமகள் வீற்றிருக்கும் ஊராக, பொன்விளையும் நகரமாக புதுவயல் நகரம் சிறப்புற்று விளங்கி வருகிறது.
புதுவயல் பல ஊர்களின் தொகுப்பாக விளங்கியுள்ளது.  பழையூர்,  புதுவயல், நடராசபுரம் போன்ற பல ஊர்களின் தொகுப்பு நகரமாகப் புதுவயல் திகழ்கின்றது. தற்போது இதனுடன் சாக்கோட்டையும் இணைவு பெற்றுவிட்டது. புதுவயல் பேரூராட்சியின் பகுதிகளா இவை தற்போது திகழ்கின்றன.
இவ்வூரின் நடுவில் செல்லும் சாலை நடுவீதி என்றும் அதன் இருமருங்கும் செல்லும் வீதிகள் யெ.மு. வீதி என்றும், பங்களா ஊரணிச் சாலை என்றும் அழைக்கப்பெறுகின்றன. தற்பொழுது ஊர் பெருகி பற்பல தெருக்கள் அமைந்திருக்கின்றன.
    இவ்வூரில் இளையாற்றங்குடி பட்டணசாமியார், இளையாற்றங்குடி பெருமருதூருடையார், இளையாற்றங்குடி கிண்கிணிக்கூருடையார், வயிரவன் கோவில் தொய்யனார் வகுப்பினர், வயிரவன் கோயில் பெரிய வகுப்பினர், சூரக்குடி கோவில் பிரிவினர் , இரணிக்கோவில் பிரிவினர், மாத்;தூர்கோவில் மணலூர் பிரிவு, இலுப்பக்குடிக் கோவில் பிரிவினர் என்று பல்வகைப் பிரிவு சார்ந்த நகரத்தார் பெருமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் ஒற்றை வீட்டு நகரத்தார், நாட்டார், இசுலாமியர் ஆகியோரும் இணைந்து வாழும் ஒற்றுமை நகரமாக புதுவயல் நகரம் விளங்கி வருகின்றது.
தெய்வச்சிறப்பு   
இவ்வூரில் உள்ள கோயில்கள் பலவாகும். இருப்பினும் அருகில் உள்ள சாக்கோட்டை உமையாம்பிகை உடனாய வீரசேகரர், உய்யவந்தாளை முன்வைத்தே அனைத்துச் செயல்களையும் இவ்வூர் மக்கள் நடத்திக்கொள்கின்றனர். முழுமுதல் கடவுளான கைலாச விநாயகருக்கு வெள்ளி அங்கி, தேர் ஆகியன சிறப்பு சேரக்கின்றன. இவரின் ஆலயத்தில் நவகிரகங்கள், சிவ பார்வதி சன்னதி ஆகியனவும் உள்ளன. நகரக் கூட்டம், நகரப் பொதுமுடிவுகள் அனைத்தும் இக்கோயிலை முன்வைத்துச் செய்யப்பெறுகின்றன.  எங்கும் இல்லாத புதுமையாக இவ்வூரின் கிழக்கிலும், மேற்கிலும் இரு பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் அமைந்துள்ள கீழப்பெருமாள் கோவில் நவீனக் கட்டடக் கலையம்சத்துடன் தற்போது கட்டப்பெற்றுள்ளது. யெ.மு.பெரி, யெ.மு.வி.மு, யெ.மு.சொ. பழ, பெ.ப.வி.பழ, பெ.ப.வி.வீர. பழ, பெ.ப.வி. அரு.ராம., பெ.ப.விசித, கும.சுப. ராம ஆகிய குடும்பத்தார் இக்கோயிலைப் புதிதாக்கியும் நிர்வகித்தும் வருகிறார்கள். இப்பெருமாளின் நாமம் ரங்கநாதர் என்பதாகும். இங்கு சக்கரத்தாழ்வார், இராமர், ஆண்டாள், தாயார், அனுமன் போன்றோர் சன்னதிகளும் உள்ளன. மேலப்பெருமாள் கோவிலை அ.சு.பழ.வீர.இராம குடும்பத்தார் திருப்பணிகள் செய்து நிர்வகித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான ஒரு பசைத் தொழிற்கூடமும் செயல் பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாளுக்குச் சுந்தரராசப் பெருமாள் என்று பெயர். ஆண்டாள், கருடன், தாயார், அனுமன், சரஸ்வதி சன்னதிகள் உண்டு. இங்கு நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பானது. சந்தான கிருஷ்ணருக்கும் இவ்வூரில் ஆலயம் உண்டு. எஸ்.பி. எல் சிவகாமி ஆச்சி அவர்களால் கீழப்பெருமாள் கோவிலின் எதிர்ப்புறத்தில் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோயில் ஏகாதசிமடமாகும். இக்கோயில் 2010 ஆம் ஆண்டில் சி. பழ. சுப. சி குடும்பத்தாரால் திருக்குடமுழுக்கு செய்யப் பெற்றது.    
    கிழக்கிலும் மேற்கிலும் பெருமாள்கள் இருக்கப் பச்சைப் பசேலென்ற காட்டில் சிவன் இருக்கிறார். இவ்வூரின் எல்லையில் விளங்கும் கைலாச நாதர் நித்யகல்யாணி கோவில் உள்ளது. இதனைக் காட்டுச் சிவன் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர். அடர்ந்த வனத்தில் பூத்த புதுமலராகச் சிவபிரான் இங்குக் காட்சி தருகிறார். இக்கோயிலின் அருகில் உள்ள வனமும், குளமும் சிவவளமையைக் காட்டுவன. கண்ணுக்குக் குளிர்ச்சியை நல்கி மூசு வண்டறைப் பொய்கைச் சூழலைத் தருகின்றன.
 இக்கோயில்கள் தவிர இரட்டைப் பிள்ளையார் கோயில், ஐயப்பன் கோவில், நடராசபுரம் ஊருணிப் பிள்ளையார் கோயில் போன்றனவும் பெயர் சொல்லும் அளவில் விளங்குகின்றன. நடராசபுரத்தில் உள்ள ஊருணி குடிநீர் ஊருணியாக இன்னமும் பாதுகாக்கப்பெற்று வருகிறது.
    புதுவயல் சார்ந்த வீரப்ப சுவாமிகள் கோவிலூர் வேதாந்த மடத்தில் பயின்று அங்கேயே துறவு பூண்டு கோவிலூர் ஆதீன மடாதிபதியாகவும் விளங்கினார். இவர் 1848 ஆம் ஆண்டு பிறந்தார். 1883 ஆம் ஆண்டில் மடாதிபதியாகி 28 ஆண்டுகள் அருளாட்சி நடத்தினார். இவரின் அருளாட்சிக் காலத்தில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றன. இவர் உடன் கோபப்படும் தன்மை வாய்ந்தவர். இவரின் கோபத்தன்மை மாற திருக்களர் என்ற ஆலயத்திற்குச் செல்ல வழிகாட்டப்பெற்றது. இவரும் அக்கோயிலுக்குச் சென்றார். இவரின் கோபம் தீர்ந்தது. திருக்களரில் துர்வாச முனிவருக்குக் கோபம் வராமல் சிவபெருமான் கருணைபுரிந்தான் என்பதால் இவருக்கும் அந்நிலை கிடைத்தது. இவர் திருக்களரில் ஓடாமல் நின்றிருந்த தேரைத் தன் உயிர் தந்து ஓடவைத்தார். புதிதாகச் செய்யப்பெற்ற தேர் முதன் முதலாக நகர்த்தப்படும்போது, உயிர்ப்பலி தரவேண்டும் என்று தேர் செய்பவர்கள் சொல்ல ;வீரப்ப சுவாமிகள் உயிர்ப்பலி கூடாது என்று அதனைத் தவிர்த்தார். உயிர்ப்பலி தராமல் ஓடிய தேர் ஓரிடத்தில் நின்றுவிட்டது. இதனை அறிந்த வீரப்ப சுவாமிகள் தன் உயிரை எடுத்துக்கொண்டுத் தேரை நகர்த்த இறைவனை இறைஞ்சினார். தேர் நகர்ந்தது. ஆனால் வீரப்ப சுவாமிகளின் உயிர் பிரிந்தது. அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது திருக்களரில் அவரின் அருட்சாமாதி இன்னமும்; அன்பர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் அரும்பாடு பட்டுச் செப்பனிட்ட கோவிலூர் திருநெல்லை அம்மன் கலைக்கோயில் இன்னமும் கலைவண்ணம் மாறாமல் அவரின் புகழ் பாடுகிறது. புதுவயலில் பிறந்த வீரப்ப சுவாமிகளால்  கோவிலூர் ஆதீனம் பெருமை பெற்றது. இன்னமும் அதன் வழி நடக்கிறது.
    தெய்வப் பாமாலைகள் பாடிப் பணிந்தேத்தும் பணியிலும் புதுவயல் நகரத்தார்கள் புகழ் பெற்று விளங்கினர். சண்முகச் செட்டியார் என்பவர் அளகை எனப்படும் சாக்கோட்டையை முன்வைத்து எட்டுப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். அளகைக் கலிவெண்பா, அளகை வெண்பாமாலை, அளகைச் சிலேடை வெண்பா, அளகை வெண்பா அந்தாதி, அளகைப் பதிற்றுப் பத்துப் பதிகம், அளகை அலங்காரம், அளகை உமை அந்தாதி, அளகை உமையம்மை பிள்ளைத் தமிழ் ஆகியன எட்டு நூல்கள் ஆகும். இவை தவிர சித்தி விநாயகர் மாலை, கைலாச விநாயகர் அந்தாதி, பழனியாண்டவர் மாலை, கம்பை நான்மணி மாலை, கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய செய்யுள்களையும் இவர் இயற்றியுள்ளார்.
    ஆண்டுதோறும் இராமாயணம் படித்தல், கந்தர் சஷ்டி விழா, ஐயப்பன் கோவில் முடிகட்டுதல் நிகழ்ச்சி ஆகியவற்றில் பக்தி இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நவராத்திரி சமயத்தில் நடைபெறும் அம்பு போடும் நிகழ்ச்சி நடராச ஊரணிக்கரையில் மிகச் சிறப்புடன் நடந்து வருகின்றது. பேட்டையார் மண்டகப்படியின்போதும் இலக்கிய நாடக நிகழ்ச்சிகள் வைக்கப்பெறுகின்றன.
    இவைதவிர படைப்பு வீடுகள் பலவும் இவ்வூரில் உள்ளன. இளையாற்றங்குடி பெருமருதூருடையார், வைரவன் கோயில் பெரிய வகுப்பு, வயிரவன் கோயில் தெய்யனார் வகுப்பு, சூரக்குடி பங்காளிகள் ஆகியோர் படைப்புகள் படைத்துவருகின்றனர். நல்லிப் பாட்டி-கருப்பையா படைப்பு வீடு ஒன்றும் உள்ளது.
தமிழ்ச் சிறப்பு
    இவ்வூரில் சரசுவதி சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவப்பெற்றுள்ளது. 1922 ஆம் ஆண்டு துவங்கப்பெற்ற இச்சங்கம் அவ்வாண்டு முதல் இன்றுவரை தமிழறிஞர்கள் பலரை அழைத்துத் தமிழ்மணம் பரப்பி வருகிறது. இதன் துணை அமைப்பாக ஸ்ரீ சரசுவதி வித்யாசாலை என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பெற்றது. இக்கல்வி நிறுவனத்தின் வாயிலாக துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியன செயல்பட்டு வருகின்றன. துவக்கப்பள்ளியில் இருபாலரும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பெண்களும் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டுவிழா சிறப்பிற்குரியது. இவ்வாண்டுவிழாக்களில் மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பெற்றுள்ளன. மேலும் இச்சங்கத்திற்கு வ.உ.சிதம்பரனார், ரா.பி சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், டி.கே.சி,  திருவி.க, ஐயன் பெருமாள் கோனார், சீனுவாச ராகவன், முத்துசிவன், வ.சுப.மா., கம்பனடிப்பொடி சா. கணேசனார் போன்ற பல அறிஞர்கள் வந்து உரையாற்றியுள்ளனர். இந்நிறுவனத்தின் சார்பில் சரசுவதி பூசை அன்று சரசுவதி தேவி தேரில் பவனி வருவாள்;.
கல்விச் சிறப்பு
    ஆண்கள் படிக்கும் பள்ளியாக இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி விளங்கிவருகின்றது. இக்கல்வி நிறுவனத்தின் சார்பில் துவக்கப்பள்ளியும் நடைபெற்றுவருகிறது. இப்பள்ளி தவிர  ஜி.டி நாயுடு பெயரில் ஒரு துவக்கப்பள்ளியும் n;தாழிற்பயிற்சிப் பள்ளியும் சாக்கோட்டையில் நடைபெற்றுவருகிறது. இலவசமாகத் தையல் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முதலியனவற்றை இங்குக் கற்கலாம். தற்போது கலைவாணிப் பள்ளி, வள்ளியம்மை ஆச்சி மாண்டிச்சேரிப் பள்ளி, அல்மீன் பள்ளி, வித்யாகிரிப் பள்ளி ஆகியனவும், வித்யாகிரி கலைக் கல்லூரியும் புதுவயல் சார்ந்து அமைந்துள்ளன.
வணிகச் சிறப்பு
     இவ்வூரில் நடைபெறும் புதன் கிழமைச் சந்தை குறிப்பிடத்தகுந்தது. மேலும் தற்போது அரிசி உருவாக்கும் தொழிற்சாலைகளால் இவ்வூர் வணிகச் சிறப்பினை ;அ;திகம் பெற்றுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பாண்டியன் கிராம வங்கி, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவுர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் தானியங்கிப் பணச் சேவை மையத்துடன் இயங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு வங்கியும் உள்ளது. இங்கு வணிகத்திற்கு வரும் பெரியகோட்டை மல்லி சிறப்புடையது.
நிர்வாகம்
    புதுவயல் பேரூராட்சி நிர்வாக அமைப்புடையது. இப்பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கட்டடத்தை யெ. மு. விஸ்வநாதன் அவர்கள் கட்டித் தந்துள்ளார்கள். இவர் புதுவயல் பேரூராட்சி த்லைவராகவும் இருந்தவர். இதன் காரணமாக இப்பேரூராட்சி நிலையத்திற்கு விசுவநாதன் நிலையம் என்று பெயர் வைக்கப்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரில் மருத்துவமனை அமைய யெ.மு. குடும்பத்தார் நிலம் அளித்து உதவி செய்துள்ளனர். முத்தப்பா பூங்கா என்றொரு பூங்காவும் சிறப்புடன் நிர்வகிக்கப்பெற்று வரப்பெறுகிறது. இவர்களின் மூத்தோர் யெ. முத்தப்பன் அவர்கள் ராவ் சாகிபு பட்டம் பெற்றவர். நகரத்தார்கள் தங்கள் விழாக்களை நடத்திக் கொள்ள ஒரு திருமண மண்டபம் அ;மைக்கப்பெற்றுள்ளது. அதில் பாதுகாப்புப் பெட்டக வசதியும் வைக்கப்பெற்றுள்ளது. இதனுடன் யெ. மு. சொ அரங்கம் என்ற அரங்கம் மாப்பிள்ளை அழைப்பு போன்ற விசேடங்களுக்குப் பயன்படுத்தப்பெற்று வருகிறது. இவ்வூர் நகரத்தார் ஒன்றிணைந்து அவ்வப்போது முகவரிப் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
இலக்கியவாதிகள்
    இவ்வூர் இலக்கியவாதிகள் பலரின் உறைவிடமாக விளங்கி வருகிறது. இவ்வூர் சார்ந்த வாழும் இலக்கியவாதிகளாக திருமதி உமையாள் முத்து, முனைவர் பழ. முத்தப்பன், கவிஞர் செல்லப்பன் ஆகியோர் விளங்குகின்றனர். கவிஞர் பெரி சிவனடியான், ஆசிரியர் செல்லப்பன் போன்றோர் வாழ்ந்த படைப்பாளர்களாக விளங்குகின்றனர்.

No comments: